ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்தனர்.ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்களை காண்பிப்பதும், ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவதும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிர்ச்சி புகார்களை அடுக்கினார்கள். இதனை தொடர்ந்து காம கொடூர ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர்.ஆசிரியர் ராஜகோபாலனிடம் புழல் போலீசார் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட்ட வேண்டும். இந்த பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளி கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குனர், கணினி குற்ற தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.இந்த குழு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும், இணையவழி நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கும். இணைய வழி வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு ஹெல்ப்லைன் உருவாக்கப்படும்.இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்பு காவல் பிரிவில் காவல்கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *