தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரமாண்ட மைதானத்தில் இன்று காலை பேரமைப்பு கொடியேற்றத்துடன் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்று பேசியதாவது:-சில அதிகாரிகள் வணிகர்களுக்கு இன்னல்களை தந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஆட்சிமன்ற குழுவில் பேசியது போல, இந்த மாநாடு முடிந்ததும், நாளை முதல் தமிழக வணிகர்கள் தலைநிமிர்ந்து நடக்கும் சூழல் ஏற்படும். இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என்றார்.

மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில் : வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறை. இந்த மாநாட்டை பொறுத்தமட்டில் சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்றார்.

அதனை தொடர்ந்து மாநாட்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முதுபெரும் வணிகர்களுக்கு வ.உ.சி.வணிகச்செம்மல் விருதுகள் வழங்கி, நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவக கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது: பொதுவாக சட்டமன்றம் நடைபெறும் நேரத்தில் நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்து விடுவது உண்டு. இருந்தாலும் இன்று காலை சட்டமன்றத்துக்கு இடையே இங்கு வந்துள்ளேன். தலைவர் விக்கிரமராஜா அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு இந்த மாநாட்டில் பங்குபெற்றுள்ளேன். ஆட்சி பொறுபேற்றபோது கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்ய முதலமைச்சர் நிவாரண நிதி வசூலித்த நேரத்தில், நிதியுதவி வழங்கிய வணிகர்களை பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்ததாக இலங்கை மக்களுக்கு உதவி செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அதற்கான பணியையும் தற்போது தொடங்கி உள்ளோம். ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்கட்சியாக இருக்கும்போதே உதவிகள் செய்துள்ளோம். திருச்சி என்றால் திமுகவுக்கு திருப்பு முனை. அது போல் திருச்சியில் நடக்கும் இந்தவணிகர்கள் மாநாடும் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. வணிகர்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருப்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.மாநாட்டில், வணிகர் நலவாரியம் செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகள் வாடகை முரண்பாடுகளை நீக்கி, தற்போது உள்ள கடை உரிமையாளர்களின் பெயரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒற்றை சாளர முறையில் ஆயுள் உரிமமாகவோ அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்திடுமாறு அறிவிக்க வேண்டும்.

தயாரிப்பு நிலையிலேயே தடை செய்யப்பட்ட புகையிலை. குட்கா மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, சாலை விரிவாக்கம், மெட்ரோ பணிகள் மூலம் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படும் வணிகர்களுக்கே மீண்டும் கடைகளை வழங்க வேண்டும். வணிகர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை மாநில பொருளாளர் சதக்கத்துல்லா வாசித்தார்.

மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில் மகே~; பொய்யாமொழி, மூர்த்தி, மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநிலதுணைத்தலைவரும், திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான எஸ்.கந்தன், மாநில துணைத்தலைவர் கே.எம்.ஸ்.ஹக்கீம், மாநில இணைச்செயலாளர் ராஜாங்கம், நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அன்பழகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் கே.எம்.எஸ்.மொய்தீன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *