108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைதேர் திருவிழா 3-ம் தேதி இன்று காலை 9.30மணி அளவில் வெள்ளை கோபுரம் அருகே உள்ள தேரில் முகூர்த்த கால் நடும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் இருந்து மங்களப் பொருட்களை கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகியவை உடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டாச்சாரியார் மற்றும் பாலாஜி பட்டாச்சாரியார் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊழியர்கள் பக்த்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வருகிற 6 ஆம் தேதி என்று சித்திரை தேர் கொடியேற்ற நிகழ்ச்சியும் மற்றும் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டமானது வருகின்ற 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அதிகாலை 4 மணி அளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணி அளவில் தேர் முட்டி மண்டபத்தில் வந்தடைவார். அதிகாலை 5.00 மணி அளவில் சித்திரைவீதியில் உள்ள தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் . இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரை தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் வைபவம் நடைபெறும்.
