திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை படைப்பிரிவுகள், மாவட்ட ஊர்காவல் படை, காவல்துறையின் இசைக்குழு உள்ளிட்ட அணி வகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ண பலுன்களையும், சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டு, தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இவ்விழாவில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.7.79 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், 25 ஆண்டுகள் மாசற்ற பணி புரிந்தவர்களுக்கும், மாவட்ட முதல்நிலை அலுவலர்களுக்கும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை. வேளாண்மை மற்று மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, கரூவூலம் மற்றும் கணக்கு துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாகப் பணியாற்றிய 460 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேச பக்தி பாடல்கள், நாட்டுப்புற நடனம், வந்தே பாரதம் பாடல்கள், யோகா, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்துகளை வழியுறுத்தும் வகையில் SRV – சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி, அபோட் மார்ஷல் RC மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலை காவிரி நுண்கலைக் கல்லூரி ஆகிய பள்ளிக் கல்லூரிகளின் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மல்லர் கம்பம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
