சி.ஐ.டி.யு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் எம்.ஏழுமலை வரவு – செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் என்.ராசப்பன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தர், எடையாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பல வருடங்களாகப் பணி நிரந்தரம் இன்றி குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு இவர்களை உடனடியாகப் பணி வரன்முறைப்படுத்த வேண்டும்.

10 ஆண்டுகள் பணிபுரிந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இளம் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இந்த அட்டை வழங்கப்படுவதில்லை. எனவே, சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உடனடியாக இளஞ்சிவப்பு அட்டை வழங்குவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும். ‘தாயுமானவர்’ திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைந்து, அத்திட்டம் முறையாகவும், முழுமையாகவும் செயல்பட வாணிபக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தால் ஏழை, எளிய மக்கள், விதவைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தமிழக அரசும் வாணிபக் கழக நிர்வாகமும் இதற்குச் செவிசாய்க்கத் தவறினால், அடுத்தகட்டமாகச் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், திருச்சி மண்டலத் தலைவர் வேலு நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்