சேலம் மாவட்டம், ஆத்தூர் நத்தக்கரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆதிமூலம் வயது 62. இவர் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி, சென்னை மற்றும் கோயமுத்தூர் போன்ற ஊர்களுக்கு சென்று பணம் வைத்து சூதாடும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்திற்கு சூதாட வந்த ஆதிமூலத்திற்கு சமயபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சூதாட்டம் விளையாட அலெக்ஸிடம் இருந்து 1 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார் ஆதிமூலம். கொடுத்த கடனில் அலெக்ஸிடம் 41 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆதிமூலம் திருப்பி கொடுத்துள்ளார்.

கடத்தப்பட்ட முதியவர் ஆதிமூலம்

இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஆதிமூலத்தை கடத்தி மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்ட அலெக்ஸ் அவரை போனில் தொடர்பு கொண்டு திருச்சிக்கு வரும்படி அழைத்துள்ளார். சூதாட்டம் ஆடும் ஆவலில் திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்பிளாசா பகுதிக்கு வந்த ஆதிமூலத்தை அலெக்ஸ் அவரது நண்பர்களான ரோகித், மிதுன்சக்கரவர்த்தி, அப்பாஸ் மற்றும் சுரேன் ஆகியோர் துணையுடன் ஆதிமூலத்தை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் பகுதியில் உள்ள காட்டில் வைத்துள்ளனர். பின்னர் ஆதிமூலத்தின் மகன் சௌந்தரை போனில் தொடர்பு கொண்ட அலெக்சும் அவனது கூட்டாளிகளும் 5 லட்சம் பணம் கொடுத்தால் உன் அப்பாவை விடுவோம் இல்லையெனில் கொன்றுவிடுவோம். ஆகையால் சமயபுரம் டோல்பிளாசா அருகே வந்து பணத்தை கொடுத்துவிட்டு உன் அப்பாவை அழைத்து செல் என்று மிரட்டியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதிமூலத்தின் மகன் சௌந்தர் சுதாரிப்புடன் சமயபுரம் போலீசாருக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார்.

அதன் பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் செல்போன் சிக்னலை வைத்து சமயபுரம் டோல்பிளாசா அருகே பதுங்கி இருந்த அலெக்ஸ் அவனது கூட்டாளிகள் ரோகித், மிதுன்சக்கரவர்த்தியை கைது செய்து ஆதிமூலத்தை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் அலெக்ஸ், ரோகித், மிதுன்சக்கரவர்த்தி ஆகிய 3 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்பாஸ், சுரேனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்