திருச்சி, மணப்பாறையை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60) இவர் மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் மணப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலாதேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள நிலையில் மற்றொரு பெண்ணான நிர்மலா தேவி (இவருவருக்கும் ஒரே பெயர்) என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியான நிர்மலா தேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் முதல் மனைவியான ஆசிரியை நிர்மலா தேவியின் பெயரில் மணப்பாறையில் இருந்த பலலட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை தனது இரண்டாவது மனைவியும் நிர்மலாதேவி என்பதால் ஆள்மாறாட்டம் செய்து (இரண்டாவது மனைவியை முதல் மனைவியாக காண்பித்து) தன்னுடைய பெயருக்கு 2018 ம் ஆண்டு நவம்பரில் மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி பதிவு செய்தார். இந்த மோசடி குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி நிர்மலா தேவி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து மணப்பாறை போலீசார் சந்திரசேகர் மற்றும் இவரது இரண்டாவது மனைவி நிர்மலாதேவி ஆகிய இருவர் மீதும் 419 மற்றும் 420 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவியும் முன்னாள் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினருமான நிர்மலா தேவி மற்றும் சாட்சி கையொப்பம் போட்டவர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தேவி ஆகிய இருவருக்கும் ஒரு பிரிவிற்கு தலா 3 ஆண்டுகள் வீதம் இரண்டு பிரிவுகளுக்கும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மற்ற இருவரையும் விடுதலை செய்து நீதிபதி கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பிரமுகர்களான கணவன் மனைவி தம்பதிக்கு மோசடி வழக்கில் 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ள நிகழ்வு மணப்பாறை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *