திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ஆதி காளிகாம்பாள், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டு அர்ச்சகர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் நிஷாந்த் மனோஜ் கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உற்சவர் சன்னதியின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை மர்ம நபர்கள் சிலர் முன்பக்க கதவை திறக்காமல் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து சிலையை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் அனுராதா செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகப்பிரியா வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தகவல் அறிந்து இன்று கோவிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் செசன்ஸ் கோர்ட் போலீசாருடன் இணைந்து இத்திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் கோவிலில் சிலை திருட்டு நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்