திருச்சி மாநகர் மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள ESI மருத்துவமனையில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு மருத்துவரிடம் என்ன வசதிகள் உள்ளது, என்ன குறைகள் உள்ளது என்பதை கேட்டு அறிந்தார். மேலும் மருந்துகள் இருப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்பு வருகை பதிவேட்டினை மருத்துவரிடம் காண்பிக்க சொல்லி மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறதா ?அல்லது போதுமான மருத்துவர்கள் உள்ளார்களா? என்பதை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து நோயாளிகளை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்த பிறகு என்ன வசதிகள் மருத்துவமனையில் உள்ளது, என்ன வசதிகள் இல்லை என்பதை கேட்டு அறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் துறை நலம்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசியது..

திருச்சி இ எஸ் ஐ மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. போதுமான அளவிற்கு இட வசதியும், மருந்துகளும் உள்ளது. இங்கு பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பல் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என தெரிவித்தார். இந்த மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் நோயாளியிடம் என்ன குறைகள் இருக்கிறது என்பதை கேட்டு அறிந்தேன். அவர்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் கொசு தொல்லை இருப்பதாக தெரிவித்தார்கள், அவற்றை உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளேன் என கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, முறையான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் , அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் அடிப்படையில், அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள் . தமிழ்நாட்டை பொறுத்தவரை வட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இங்கு முழு பாதுகாப்பு , மேலும் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் கண்டிப்பாக இந்த அரசு செய்து தரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *