தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் அறிக்கையினை கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஐஜேகே கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பாரிவேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் எம்பியாக கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றி உள்ளேன். கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். தற்போது நான் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறேன். இந்த தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். இதன்படி வேந்தரின் இலவச உயர்கல்வி திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழை, எளிய 1200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தொகுதிக்கு உட்பட்ட 1500 குடும்பங்களுக்கு எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் மதிப்பில் இலவச உயர் மருத்துவ சிகிச்சைக்கான இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்திட முயற்சி எடுக்கப்படும். படித்த இளைஞர் நலனுக்காக 6 மாதத்திற்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். மகளிர் சுய தொழில் தொடங்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பெரம்பலூர் தொகுதியில் பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கிட முயற்சிகள் எடுக்கப்படும். பெரம்பலூர் மற்றும் முசிறியில் சின்ன வெங்காயம் மற்றும் வாழைப்பழங்களுக்கு மதிப்புக்கூட்டு தொழிற்சாலை அமைக்கப்படும்.

மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி மற்றும் பெரம்பலூர் சின்னவெங்காயத்திற்கு புவிசார் குறியீடு பெறபட்டு விவசாய விளைபெருட்களின் பாரம்பரியம் மற்றும் தரம் பாதுகாக்கப்படும். திருச்சி – மண்ணச்சநல்லூர் – துறையூர் – சேலம் போக்குவரத்து சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். நம்பர் ஒன் டோல்கேட் – முசிறி செல்லும் சாலை நான்குவழி சாலையாக தரம் உயர்த்தப்படும். லால்குடி மற்றும் குளித்தலையில் தலா ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி, துறையூர் பச்சை மலையில் சைனிக் பள்ளி அமைக்க நடவடிக்கையும், அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும். குருவாயூர் மற்றும் மங்களூர் விரைவு இரயில்கள் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும். கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சட்டமன்ற ஆறு தொகுதியிலும் இளைஞர் நலனை ஊக்கப்படுத்த விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி மையம் அமைக்கப்படும். புள்ளம்பாடி, லாலாபேட்டையில ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும், 6 சட்டசபை தொகுதிகளிலும் விவசாயதுறையை வலுபடுத்த உலக வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும். விவசாயிகள் பயன்பெரும் வகையில் முசிறி மற்றும் தொட்டியம் பகுதியில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளித்தலை நகராட்சியில் புது பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படும். புள்ளம்பாடி மற்றும் லாலாபேட்டையில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

தொன்மை வாய்ந்த ரஞ்சன்குடிகோட்டை, வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் ஆலயம், பச்சைமலை மற்றும் புளியஞ்சோலை ஆகிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். காவேரி ஆற்றின் உபரிநீர் சிக்கத்தம்பூர் ஏரியினை நிரப்பவும், பஞ்சம்பட்டி ஏரியை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாமன்னர் பெரும்பிடுகு முத்திரையருக்கு சொந்த நிதியில் இருந்து வெங்கல சிலை அமைக்கப்படும். அதுபோல, துறையூரில் வீரன் சுந்தரலிங்கனாருக்க வெங்கலசிலை அமைக்கப்படும். பெரம்பலூர் தொகுதியில் உள்ள 6 சட்டசபை ஆறு தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.பேட்டியின்போது ஐஜேகே பொதுசெயலாளர் ஜெயசீலன், பாஜக மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியன், மாவட்ட தலைவர் செல்வராஜ், ஒபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில் குமார், தமாகா மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், ஐஜேகே மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வன், மாவட்ட தலைவர் ரகுபதி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை, சமத்துவபுரம், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், காவேரி மஹால், காமராஜர் வளைவு, சங்கு. துறைமங்கலம் பகுதிகளில் தனது கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் பாரிவேந்தார் தீவிர பிரச்சாரம் செய்தார். பட்டாசு வெடித்தும், திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *