தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் திருச்சி அருணாச்சல மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் மற்றும் youtube சேனல் நடத்துபவர்களை ஒருமையில் பேசி இருக்கின்றார்.ஒரு அரசியல் இயக்கத்தில் மாநில தலைவராக இருப்பவருக்கு கண்ணியம் அவசியம். வரம்பு மீறி ஐபிஎஸ் தோரணையில் தனிநபர் தாக்குதலை தொடுக்கும் அண்ணாமலையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோன்று ராகுல்ஜியின் ஒற்றுமைப் பயணத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார். ராகுல் காந்திக்கு தென் மாநிலங்களில் கிடைத்த வரவேற்பு வட மாநிலங்களில் இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் தென் மாநிலங்களை விட ஒரு படி மேலே வட மாநிலங்களில் வரவேற்பு கிடைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு பேசுகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கிறார். எதிர் கேள்வி இருக்காது என்பதால் வானொலியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் அவரை பத்திரிகையாளரை சந்திக்க சொல்லுங்கள். மக்களை மதரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் பாஜக தான் பிரித்து கொண்டு இருக்கிறது. முதலில் அண்ணாமலை காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லட்டும்.

 கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சொன்னவர் இதுவரை வெளியிடவில்லை. செயல்படுத்துவதை மட்டும் பேசுங்கள். இதுபோன்ற அண்ணாமலையின் தனிநபர் தாக்குதல்கள் தொடர்ந்தால் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் குதிக்கும். தமிழக கவர்னர் ஆரம்பத்திலிருந்து ஆர் எஸ்.எஸ்., பாஜக தலைவரை போன்று பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ் என்பது தமிழர்களின் உணர்வுடன் கலந்தது. தமிழக கலாச்சாரத்தில் தலையிடும் உரிமை கவர்னருக்கு கிடையாது. அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *