கோவிந்தா. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப் படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இவ்வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 13-ந்தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். 17-ந்தேதி நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, பங்குனி தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 8.40 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர் கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 9.45 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிப்பட்டனர். இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்பட்டது. நாளை (ஞாயிற்று கிழமை) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *