திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காந்திநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை சிறுமி கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், உயிரிழந்த சிறுமிக்கு இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, ஏராளமான பெண்களை மாதர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்கும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல், 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதை சரிசெய்யவும், பிரகாசமின்றி எரியும் மற்றும் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்கவும், சாக்கடைகளை தூர்வாரி கொசு மருந்து தெளிக்கவும், அங்காங்கு வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை மராமத்து செய்து புதிய தொட்டிகள் அமைத்து முறையாக தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வருகிற 26.05.2026 செவ்வாய்க்கிழமை மனு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட குழு உறுப்பினர் நிவேதா, கிளை நிர்வாகிகள் ஜான்சி ராணி, சசிகலா, அம்பிகா, வாணி, சுமித்ரா, சங்கீதா, கௌசல்யா, மதுமிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் மற்றும் சிறுமிகளும் திரளாக பங்கேற்றனர்.
