திருச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் மாவட்ட கழக துணை செயலாளர், மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, முன்னாள் அமைச்சர் கே என் நேரு, மற்றும் திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் புகழையும் சாதனைகளையும் போற்றி சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்.. கடந்த ஐந்தாண்டு கால மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மட்டும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக 34,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, எண்ணற்ற பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருச்சியின் 9 தொகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கச் செய்தது திமுக ஆட்சிக் காலத்தில் தான், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டா வழங்குவதில் இருந்த சிக்கல்களைத் தீர்த்து, சுமார் 40 முதல் 50 ஆண்டுகளாக வசித்து வந்த 15,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், திருச்சியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், தூய்மையைப் பேணவும் 100 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட மாபெரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சித் திட்டம் தற்போதைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவையும், சில தொகுதிகளில் ஏற்பட்ட மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலான பின்னடைவுகளையும் குறிப்பிட்ட அமைச்சர், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அது குறித்துப் பேச இயலாது என்றார். இருப்பினும், மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து உழைக்கப் போவதாகக் கூறினார். மேலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தாய்மார்களும் பொதுமக்களும் தங்களது பேராதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் துரைராஜ், கோட்டத் தலைவர் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், பகுதிச் செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
