திருச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் விவசாய சங்கத்தின் தலைவர்கள் ராஜாராம், தன்பால், நல்லசாமி, தீட்சதர் பாலு , அய்யாக்கண்ணு வழக்கறிஞர் கோவிந்த சாமி, முத்து கிருஷ்ணன், நந்தகுமார் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களும் வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன் தெரிவித்ததாவது:

“மேகதாட்டு அணை கட்டுமானத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டு இயக்கக் கூட்டத்தில் வைக்கப்பட்ட 5 முக்கிய கோரிக்கைகளில், சட்டமன்றத் தீர்மானம் என்பது முதலாவது கோரிக்கையாகும். அது தற்போது நிறைவேறியுள்ளது. இரண்டாவது கோரிக்கையாக, மேகதாட்டு அணைக்கு எதிராக தமிழக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து வலியுறுத்தியிருந்தோம். இது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தொழில்நுட்ப அறிக்கைகள் (Technical / Evaluation Reports) மற்றும் தமிழக அரசிடம் உள்ள சாதகமான தரவுகள் அனைத்தையும் திரட்டி வழக்கு தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உதவ விவசாய சங்கங்கள் கூட்டு இயக்கம் சார்பாக ஒரு தனிக் குழு (Committee) உருவாக்கப்படும், அதன் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். அவை தமிழக அரசிடம் வழங்கப்படும் அந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக வழக்கை எதிர்கொண்டு வெல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 தமிழக அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்குத் துணையாக, விவசாய சங்கங்களின் சார்பில் கூடுதல் சட்டக் குறிப்புகள் (Legal Points) வழங்கப்படவுள்ளன. மேகதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும், 5 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பும் நல்வாழ்வும் கேள்விக்குறியாகும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் கர்நாடகா அங்கு அணை கட்டுவதைத் தடுக்க அத்தனை விவசாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

மேலும் இது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனை என்பதால், தனிநபராக வழக்கு தொடர்வதை விட, மாநில அரசுடன் இணைந்து பயணிப்பதே சரியாக இருக்கும். தமிழக அரசு தொடுக்கும் வழக்கில் நமது தரப்புகளையும், விவசாயிகளின் பாதிப்புகளையும் வலுவாக முன்வைத்து, அரசுடன் இணைந்து இந்த வழக்கை எதிர்கொள்ளவோம் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார். சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் களப்போராட்டத்திலும் நாங்கள் ஈடுபடுவோம் எனவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்