தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ஆடி மாதம் என்பதால் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. தங்க தேரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வெக்காளி அம்மனை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் பக்தர்கள் முகம் சுளிக்கும் விதமாக தவெகவினர் அம்மனை தரிசிக்க விடாமல் அம்மன் முகத்தை மறைத்தபடி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் படத்தை தேருக்கு முன் தூக்கி பிடித்த படி அம்மனை மறைத்தபடி எடுத்து வந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் அங்கிருந்த பக்தர்கள் சிலர் கூறுகையில் இந்த பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து வருகின்றனர் ஆனால் ஒருபோதும் அம்மனை இப்படி தரிசிக்க விடாமல் புகைப்படத்தை அம்மனுக்கு முன்னால் வைத்துக்கொண்டு யாரும் சென்றதில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி ஏற்பாட்டில் இன்று அம்மனை தரிசிக்க விடாமல் செய்த தவெகவினரின் செயல் மிகவும் அதிர்ச்சியையும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
