தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தவர் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார். சேலத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் டெல்லியில் பணியாற்றி வருவதாக கூறி பல்வேறு இடங்களில் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ரூபாய் 70 ரூபாய லட்சம் மோசடி செய்ததாக புகார். இந்த விவகாரத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமாரை , போரூர் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் அரவிந்த்குமார் (30) என்பவர் , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் இடம் புகார் மனு கொடுத்தார். அதில் தனது தந்தை பொன்னுசாமி மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை அரிசி மண்டி தரகரான அன்னதானப் பட்டியைச் சேர்ந்த நடராஜன் பழக்கமானார்.

பின்னர் நடராஜன் தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் என்பவரை அறிமுகப்படுத்தி அவர் மூலம் நண்பர்கள் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி , நானும் எனது உறவினர்கள் சிலரிடமிருந்தும் அரசு வேலைக்காக கடந்த 2015 -16ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூபாய் 2 கோடி 83 லட்ச ரூபாய பணத்தை பல தவணைகளாக சசிகுமாரிடம் வழங்கினோம். ஆனால் சசிக்குமார் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார் .இந்த நிலையில் அவர் ஒரு போலி ஐஏஎஸ் அதிகாரி என தெரிய வந்தது. இதனால் அவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். பணத்தை திருப்பி தராமல் சசிகுமார் , அவருடைய மனைவி சாந்தலட்சுமி , அரிசி மண்டி தரகர் நடராஜன், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் அர்களது கூட்டாளிகளான முகமது உஸ்மான் , மணி கோபி ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என புகார் கூறியிருந்தார்.இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார். இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், போலி ஐஏஎஸ் அதிகாரி என கூறிக் கொண்டு வலம் வந்த சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதனை அடுத்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கூட்டு சதி, மோசடி , கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சசிகுமாரை கைது செய்ய முயற்சித்த போது அவர் ஏற்கனவே சென்னையில் தனியார் மருத்துவர் ஒருவரிடம் 70 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர் இந்த நிலையில் போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு துணையாக இருந்த அவருடைய மனைவி, நடராஜன் உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டில் கருமந்துறையை சேர்ந்த தேவராஜ் என்பவரின் எஸ்டேட்டை அபகரிக்க முயற்சித்தது தொடர்பாக அவர் மீது கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தலைமறைவான சசிகுமார் முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், அவர் கொடுத்த வி ஏ ஓ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் போலியாக தயாரித்து வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கருமந்துறை போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எடுத்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கருமந்துறை போலீசார் மனு தாக்கல் செய்து நேற்று முன்தினம் சென்னை புழல் சிறையில் இருந்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் நேற்று மாலை மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு போலி சசிக்குமார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், போலியான ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *