மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் அருண் (25) என்பவர் கடந்த ஆண்டு கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து அறிந்து, அதில் 40,000 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் 2000 ரூபாய் வட்டி கிடைக்கும் என அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் மூலம் அவரும், அவருடைய நண்பர்கள் சிலரும் இணைந்து மொத்தமாக சுமார் 16 லட்சம் ரூபாய் வரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர்.

பின், மேல்படிப்பிற்காக மதுரை வந்து இங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அருண் படித்து வரும் நிலையில், கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டதால் அருண் வழியாக முதலீடு செய்த அவரது நண்பர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பணத்தை இழப்பதற்கு அருண் தான் காரணம் எனக்கூறி, அவரிடம் 16 லட்சம் ரூபாயை தருமாறு அவரது நண்பர்கள் வற்புறுத்தி வந்த நிலையில், அவர்கள் நேற்று மதுரை வந்து கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து கத்தி முனையில் அருணை கடத்தி சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் மூலம், தல்லாகுளம் காவல்துறையினர் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து, அருணை கடத்தி சென்ற 3 பேர் கொண்ட கும்பலை அழகர்கோயில் சாலையில் வைத்து கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் மூவரும் கோவையை சேர்ந்த அரவிந்த் குமார் (23), ரிஷிகுமார் (23), கார்த்திக்கேயன் (24) ஆகிய மூவர் என்பதும், அவர்கள் அருணை கடத்தி சென்று அவரிடம் 16 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவருடைய அலைபேசியையும் பறித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகி உள்ள பிரசன்னா, ஆனந்த் ஆகிய இரண்டு இளைஞர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *