திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி 51 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மகள் திவ்யா என்பர் போட்டியிடுவார் என அ.தி.மு.க தலைமை கழகம் பட்டியல் வெளியிட்டது.

51 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மகள் திவ்யா

இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 51 வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் திவ்யாவிற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செங்கேணி என்பவர் போட்டியிடுவார் என திடீரென அறிவித்தது. இதில் மனமுடைந்து போன திவ்யா த.மா.க வேட்பாளருக்கு எதிராக 51 வது வார்டில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் திவ்யாவின் தந்தையும் அ.தி.மு.க வின் 51 வது வார்டு வட்ட செயலாளருமான பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க தொடங்கியது முதல் அக்கட்சியில் மட்டுமே இருந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். எனது மகள் 51 வது வார்டில் போட்டியிடுவார் என அ.தி.மு.க தலைமை அறிவித்தது. இதற்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்து தர வேண்டும் என முன்னாள் சுற்றுலா துறை அமைச்சரும், அ.தி.மு.க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வற்புறுத்தினார். அவர் கேட்ட நேரத்தில் அந்த பணம் என்னிடம் இல்லை. உடனடியாக வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து, உறவினர்களிடம் கடன் வாங்கி கொண்டு மறுநாள் காலை வெல்லமண்டி நடராஜனை சந்திக்க சென்றேன்.

காலதாமதமாக பணம் கொண்டு வந்ததை காரணம் காட்டி எனது மகளுக்கு ஒதுக்கிய வார்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக அவர் கூறினார்.
தொடர்ந்து இது போல் தான் வெல்லமண்டி நடராஜன் செயல்பட்டு வருகிறார். கட்சியின் உண்மை தொண்டர்களை மதிக்காமல் இருக்கிறார். அவருடைய மகனுக்கு அவர் சீட் வழங்கி உள்ளார். அவர் மாவட்ட செயலாளராக இருக்கும் வரை கட்சி அழிந்து தான் போகும். எனவே வெல்லமண்டி நடராஜன் செயலை குறித்து முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் தெரிவிப்பேன். அவரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன் என கூறினார். பணம் கொடுக்க தாமதமானதால் அ.தி.மு.க வில் கவுன்சிலர் சீட்டை மாற்றி வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.. இதில் மனமுடைந்த அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை மண்ணை வாரி இறைத்து சாபமிட்டார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து தொலைக்காட்சி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *