“தற்போது நடைபெறுவது தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்பதற்கான போர்; இதில் தமிழ்நாடு அணி தான் என்றுமே முதலிடம் பிடிக்கும்” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகரம், காட்டூர் பகுதிக்குட்பட்ட 38-வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காமராஜர் நகர், வேணுகோபால் நகர், புகழ் நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:

“கொளுத்தும் வெயிலிலும் எனக்காகக் காத்திருந்து வரவேற்ற எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியாகிய நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம்.” “நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, நமது கூட்டணி (INDIA கூட்டணி) ஒன்றிய அரசைத் திணறச் செய்து, இது சிறுபான்மையினரின் நலன் காக்கும் அணி என்பதை நிரூபித்துள்ளது.” “கடந்த 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு காலத்தில், இந்த 38-வது வார்டில் மட்டும் ₹25.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.”

“மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் போது, அன்பில் மகேஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தியை நீங்கள் எனக்குப் பரிசாக வழங்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், பகுதிச் செயலாளர் நீலமேகம், வார்டு செயலாளர் மன்சூர், தமிழ்மணி, மாமன்ற உறுப்பினர் தாஜுதீன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *