தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் எழிலன், பொதுச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த அணை கட்டப்பட்டால் காவிரி நீரோட்டம் பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் மற்றும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் மேகதாது அணைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், காவிரி நதியின் உரிமையை பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து காவிரி உரிமையை பாதுகாக்கும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்படும்.

மேலும், காவிரி மேலாண்மை தொடர்பான அமைப்புகள் தங்களது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுகளின் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேகதாது பிரச்சினையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி உரிமைக்காக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்க உள்ளோம். ஆகஸ்ட் 20 ந் தேதி தொடங்கி 22 ந்தேதி வரை திருச்சி தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் வாகனப் பரப்புரையும் முடிவில் பொதுக் கூட்டமும்,செப்டம்பர் மாதம் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டடமும் நடத்துகிறோம். அக்டோபர் மாதம் காவிரி மீட்பு மாநாடும் திருச்சியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என கட்சியின் நிறுவனர் எழிலன் தெரிவித்தார். முன்னதாக புதிதாக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
