திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த எழுச்சிகரமான இறுதிக்கட்ட சூறாவளிப் பிரச்சாரப் பேரணி, பாய்லர் ஆலை (BHEL) மற்றும் துவாக்குடி வழியாகச் சென்றது. மீண்டும் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து காட்டூர் மற்றும் பால்பண்ணை ரவுண்டானா வரை சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது. இறுதியாக, இந்தப் பேரணி மீண்டும் திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலேயே வந்தடைந்து நிறைவு பெற்றது. திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் இறுதி கட்ட பிரச்சார பேரணியின் முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தனது தொகுதிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

அவரது உரையில்: தனது தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, சாலை வசதிகள் மற்றும் 85,000 பேருக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. முக்கிய திட்டங்கள்: துவாக்குடியில் மாதிரி பள்ளி, காட்டூர் ஆதிதிராவிடர் பள்ளியில் வானவில் மன்றம், பொன்மலை பகுதியில் அன்புச் சோலை திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்கள் தனது முயற்சியால் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்ன செய்தார் என்று நாம் இந்த ஐந்து ஆண்டுகளில் போடப்பட்ட சாலைகளில் வழியாக சென்று தான் நம்மை விமர்சித்து வருவதாகவும் அது கூட தெரியாமல் அவர்கள் கூறி வருவதாகவும் எடுத்துரைத்தார்: தமிழ்நாட்டிலேயே திட்டங்களை அறிவித்ததற்காக தமிழக முதல்வர் மூன்று முறை வந்த தொகுதி எதுவென்றால் அது திருவரம்பூர் தொகுதி தான் என்றும் கூறினார். கல்வி மற்றும் விளையாட்டுத் துறை: தமிழகத்திலேயே திருச்சியில் மட்டுமே செயல்படுத்தப்படும் ஒலிம்பிக் அகாடமி திட்டம் மற்றும் 290 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஆகியவை தொகுதிக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமைகள் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

எதிர்கால வாக்குறுதிகள்: மீண்டும் வெற்றி பெற்றால், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும், மற்றும் 10 லட்சம் ‘கலைஞர் கனவு இல்லங்கள்’ கட்டித் தரப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கினார்.‌எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தனது பணிகளைப் பட்டியலிட்ட புத்தகம் ஒன்றைத் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதனை எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். “திருவெறும்பூர் தொகுதியைத் தனது தாய் வீடாகக் கருதுவதாகவும், மூன்றாவது முறையாக வாய்ப்பளித்தால் தொகுதியை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன்” என்றும் அவர் உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார்.

நான் முதல் முறை நின்ற பொழுது என்னை யார் என்று தெரியாத பொழுதே உங்கள் வீட்டுப் பிள்ளையாக வெற்றி பெற செய்து அடுத்த முறையும் வெற்றி பெற செய்துள்ளீர்கள் எனவே தற்பொழுது மூன்றாவது முறை உங்களை நம்பி உங்கள் வீட்டுப் பிள்ளையாக இந்த தேர்தலை சந்தித்து வருகிறேன் எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை எனது தாய் வீடான திருவெறும்பூர் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன் நன்றி வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *